பல்லடத்தில் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பல்லடத்தில் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்,
பல்லடத்தில் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டா பெயர் மாறுதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 52). நெசவு தொழிலாளி. இவர் தந்தையின் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு உரிய ஆவணங்களுடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை ( 48) சந்தித்து இது குறித்து கூறியுள்ளார். ஆனால் அவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜாமணி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தெட்சணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் வினோதினி ஆகியோர் ரசாயணம் தடவிய ரூ.10 ஆயிரத்தை துணை தாசில்தார் மேகநாதனிடம் கொடுக்கும் ராஜாமணியிடம் கூறினர். இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு ராஜாமணி நேற்று மாலை 5 மணிக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த துணை தாசில்தார் மேகநாதனிடம் ரசாயணம் தடவிய ரூ.10 ஆயிரத்தை ராஜாமணி கொடுத்தார்.
கைது
அப்போது அந்த பகுதியில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று லஞ்சப்பணத்துடன் துணை தாசில்தார் மேகநாதனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.
பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.