சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்து இருக்கும் ஆண்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள்
சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்து இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன. எனவே எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை
சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்து இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன. எனவே எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆண்களை குறிவைத்து மோசடிகள்
தற்போது உள்ள நவீன காலத்துக்கு ஏற்ப மோசடிகளும் மாறி உள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் தற்போது மோசடி ஆசாமிகள் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கணக்கு வைத்திருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடிகள் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
பேஸ்புக் அல்லது இன்ஸ்டாக்ராம் போன்றவற்றில் கணக்கு வைத்து இருக்கும் கவுரவமான, வசதியான ஆண்களின் புரபைல்களை தேர்ந்தெடுத்து மோசடி கும்பல் கண்காணிக்கிறார்கள்.
பிறகு அழகான பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி அந்த ஆண்களுக்கு பிரண்ட்ஸ் ரிக்கியூஸ்டு கொடுத்து குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இவர்களின் மோசடி வலையில் விழுந்து வீடியோ கால் மூலம் வரும் ஆண்களின் புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்தும், வீடியோவை ரெக்கார்டு செய்தும் வைத்துக்கொள்கின்றனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்படும் ஆண்கள் பலர் இதை வெளியே சொன்னால் தங்களின் புகழுக்கு பாதிப்பு என்று நினைத்து பலர் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.
இந்த மோசடியில் பெண்களை போன்று குறுஞ்செய்தி அனுப்புவது ஆண்கள்தான் என்பதும் தெரியவந்து உள்ளது. எனவே யாரும் இதில் சபலப்பட்டு ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.