பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி தஞ்சை பழைய, புதிய பஸ் நிலையத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிப்பு

பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுவதையொட்டி தஞ்சை பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-05 16:50 GMT
தஞ்சாவூர், 

கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததையொட்டி தஞ்சை கரந்தையில்உள்ள தற்காலிக பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் செயல்படாமல் இருந்தது. நாளடைவில் தற்காலிக பஸ் நிலையம் மொத்த மீன் விற்பனை நடைபெறும் இடமாக மாற்றப்பட்டது.

இதே போல் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் இருந்த கடைகள் அங்கு செயல்பட அனுமதிக்கப்பட்டது. அதன்படி மீன்மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று மாநகராட்சி ஊழியர்களை கொண்டு செய்யப்பட்டது. தஞ்சை தற்காலிக பஸ்நிலையத்தில் மொத்த மீன் விற்பனை நடைபெற்றதால்அங்கு கழிவுநீர் தேங்கி மீன் வாடை வீசியது. இதையடுத்து நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அங்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அங்கு கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. பஸ் நிலையத்தை சுற்றிலும் குளோரின் பவுடரும் தெளிக்கப்பட்டது.

இதே போல் தஞ்சை புதிய பஸ் நிலையத்திலும் காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். மேலும் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீரைக்கொண்டு சுத்தம் செய்து கிருமி நாசினியும் தெளித்தனர். மேலும் பஸ் நிலையத்தில் வியாபாரிகள் இருப்பு வைத்து இருந்த காய்கறிகள் மற்றும் வெங்காய மூட்டைகளையும் நேற்று அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்