காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி:
தமிழக விவசாயிகள் சங்க தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, முனிராஜ், சுப்பிரமணி, பழனி, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தண்ணீர் ஆதாரத்தை அடியோடு அளிக்கும் முயற்சியை தமிழக விவசாய சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் உரிமையை மீட்க வேண்டும். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் 10 சதவீதம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஆவின் நிர்வாகம் உடனே கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழக விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் ராஜா, பெரியசாமி, லோகநாதன், சேகர், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.