ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதையடுத்து கடந்த மே மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததையடுத்து ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் நேற்று முன்தினம் மேஜை, இருக்கைகள் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.
56 நாட்களுக்கு பிறகு அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். ஓட்டல்களுக்கு வந்த அனைவரும் சமூக இடைவெளியில் அமரும் வகையில் இருக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் முக கவசம் அணிந்திருக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அத்துடன் கை கழுவும் இடம், பணம் செலுத்தும் இடங்களில் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தது. முக கவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளர்கள் ஓட்டல்களில் உணவு சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.