திருக்கடையூரில் புதர் மண்டி கிடக்கும் சீவகசிந்தாமணி வாய்க்காலை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
திருக்கடையூரில் புதர் மண்டி கிடக்கும் சீவகசிந்தாமணி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்,
திருக்கடையூரில் உள்ள சீவகசிந்தாமணி வடிகால் வாய்க்கால் சீவகசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், திருக்கடையூர் வழியாக செல்கிறது. இந்த வாய்க்காலை நம்பி பல்வேறு கிராமங்களை சேர்ந்த விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் இந்த பாசன வாய்க்கால் பல்வேறு குளங்களுக்கும், நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த வாய்க்காலை பொதுபணித்துறை தூர்வாரவில்லை.
மேற்கண்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சீவகசிந்தாமணி வடிகால் வாய்க்கால் புதர் மண்டி கிடப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள், பலமுறை புகார் செய்தும் எந்த பலனும் இல்லை.
தற்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் வருவதற்கு முன்பு பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.