தடுப்பூசி போடுவது குறித்து தண்டோரா மூலம் விழிப்புணர்வு
சுருளிப்பட்டி ஊராட்சியில் தடுப்பூசி போடுவது குறித்து தண்டோரா மூலம் ஊழியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
கம்பம்:
காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுருளிப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தடுப்பூசி போடுவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான பொது மக்கள் வந்திருந்தனர்.
இதையடுத்து மருத்துவ அலுவலர் சுதா, சித்தா டாக்டர் சிராஜ்தீன், சுகாதார ஆய்வாளர் சூரியகுமார் ஆகியோர் தலைமையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் அசைவ உணவை எடுத்து கொள்ளக் கூடாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தடுப்பூசி போட்டு கொண்டு அசைவ உணவை சாப்பிட்டால் உடலில் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்று கிராம மக்கள் கூறினர். இதையடுத்து தடுப்பூசி போட்ட டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்ளமுடியும் என்று டாக்டர் சிராஜ்தீன் கூறினார்.
மேலும் இது குறித்து ஊராட்சி சார்பில் அசைவ பிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பாதிப்பு இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.