பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்; மீண்டும் முழங்கிய அரோகரா கோஷம்
2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி:
2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கொரோனா ஊரடங்கு
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக பழனி முருகன் கோவில் மூடப்பட்டது. இருப்பினும் கோவிலில் ஆகமவிதிப்படி பூஜைகள், வழிபாடுகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முதல் கோவில், தேவாலயம், பள்ளிவாசல் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில்
அதன்படி, பழனி முருகன் கோவிலும் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் செல்லக்கூடிய பாதை, கோவில் வளாகங்கள், சன்னதி என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். குறிப்பாக கோவில் நடை திறக்கும் முன்பே அடிவார பகுதியில் பக்தர்கள் காத்திருந்தனர். அடிவாரத்தில் இருந்து ஒருவழிப்பாதையான குடமுழுக்கு அரங்கு, படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். அப்போது அரோகரா கோஷங்களை எழுப்பியபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். இதனால் கோவிலில் மீண்டும் அரோகரா கோஷம் முழங்கியது.
பக்தர்களுக்கு பரிசோதனை
முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் குடமுழுக்கு அரங்கில் வைத்து தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பரிசோதனை செய்த பக்தர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. பக்தர்கள் செல்லும் பாதையில் தானியங்கி எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசின் கட்டுப்பாடுகளின்படி முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் தேங்காய், பழம் ஏதும் கொண்டு செல்லக்கூடாது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிப்பு செய்யப்பட்டது. தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தரிசனம் செய்த பக்தர்கள் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து அனைவரும் வளமுடன் வாழ முருகப்பெருமானை வேண்டினோம் என்றனர்.