நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடியின் தந்தை கைது மகனின் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்

கும்மிடிப்பூண்டி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடியின் தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2021-07-05 05:56 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கும்புளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவரை ஆரம்பாக்கம் போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர், அப்பகுதியில் நடந்து வந்த ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவர் தலையாரிப்பளையம் கிராமத்தை சேர்ந்த கோதண்டம் (வயது 62) என்பதும், அவர் 2 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில், நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய அந்த முதியவரது மகன் தினக்குமார் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆவார். தினக்குமாரை கடந்த 2017-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த முத்து ரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டின் வாசலில் சில மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

கைது

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தனது மகன் தினக்குமாரை கொலை செய்த நபர்களை பழிக்கு பழி வாங்கும் நோக்கில் கோதண்டம் நாட்டு வெடிகுண்டுகளுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டுகள் தவிர மேலும் சில வெடிப்பொருட்களையும் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடியின் தந்தை கோதண்டத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்