செம்மஞ்சேரியில் தொழிலாளி வெட்டிக்கொலை

செம்மஞ்சேரியில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-07-05 04:46 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7-வது அவென்யூ, 82-வது குருக்கு தெருவில் வசித்து வந்தவர் வேலு (வயது 41). கூலித்தொழிலாளி. இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னை துரைப்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிக ஊழியராக கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். நேற்று முன்தினம் மது குடித்து வி்ட்டு வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தூங்கி கொண்டிருந்த வேலுவை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வேலு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

4 பேருக்கு வலைவீச்சு

விசாரணையில், வேலுவின் மருமகன் கொட்டைசப்பி சுரேஷ் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த மாதம் சென்னை சூளைமேட்டில் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் கொட்டைசப்பி சுரேஷ் இருந்ததால் அவரது ஆதரவாளர்கள் கொட்டைசப்பி சுரேஷ் உள்ளிட்டவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டி செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புக்கு அதிகாலை வந்துள்ளனர்.

யாரும் இல்லாததால் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த அவரது மாமனார் வேலுவை கொலை செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.

துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சாலைகளில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை பார்த்தபோது 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்