தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மீண்டும் ஆட்டோ பந்தயம் மோட்டார் சைக்கிள்களும் சீறிப்பாய்ந்ததால் பரபரப்பு

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மீண்டும் ஆட்டோ பந்தயம் நடைபெற்றது. இதில் மோட்டார்சைக்கிள்களும் ஆட்டோக்களுக்கு முன்பாக சாலையில் சீறிப்பாயந்தன.

Update: 2021-07-05 03:30 GMT
பூந்தமல்லி,

தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் நேற்று அதிகாலை சட்டவிரோதமாக சிலர் ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்றன.

பைபாஸ் சாலையில் காற்று வேகமாக வீசும் என்பதால் ஆட்டோக்களுக்கு முன்பு மோட்டார்சைக்கிள்கள் வேகமாக சென்று காற்றை விலக்கி விடுவதால் ஆட்டோக்கள் வேகமாக செல்ல ஏதுவாக இருக்கும் என்பதால் இதுபோல் பந்தயத்தில் ஈடுபடும் ஆட்டோக்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தது.

ஆட்டோக்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் சாலையில் போட்டி போட்டுக்கொண்டு சீறிப்பாயும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படு்த்தியது. இந்த வீடியோக்களை ஆட்டோ பந்தயம் நடத்தியவர்களே எடுத்து பரவ விட்டு உள்ளனர்.

போலீஸ் விசாரணை

ஆட்டோ பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குழு அமைத்து, அதில் பந்தயம் குறித்தும், அதில் பங்கெடுக்கும் ஆட்டோக்கள், பந்தயம் கட்டுபவர்கள் குறித்தும் தகவல்களை பரிமாறி கொள்வார்கள். ஆட்டோ பந்தயம் நடத்தியவர்கள் யார்? அதில் ஈடுபட்டவர்கள் யார்? என பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரவாயலில் நடந்த பந்தயத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ மெக்கானிக் பிரபாகரன் என்பவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்