சேலம் கிழக்கு கோட்டத்தில் தபால் ஆயுள் காப்பீடு பணிக்கு 15-ந் தேதி நேர்காணல்-விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசிநாள்
சேலம் கிழக்கு கோட்டத்தில் தபால் ஆயுள் காப்பீடு பணிக்கு வருகிற 15-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்டத்தில் தபால் ஆயுள் காப்பீடு பணிக்கு வருகிற 15-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு பணி
சேலம் தபால்துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கே.அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் தபால் கிழக்கு கோட்டத்தில் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் தபால் ஆயுள் காப்பீடு, கிராமிய தபால் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடக்கிறது.
ஆர்வம் உள்ள அனைவரும் 15-ந் தேதி அன்று சேலம் தலைமை தபால் நிலையம் 3-வது தளத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேரடி முகவர்கள், கள அலுவலர்கள்
நேரடி முகவர்கள் பணிக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் ஆகியோர் தகுதி உடையவர்கள் ஆவர்.
கள அலுவலர் பணிக்கு வயது வரம்பானது ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள், அதிகாரிகள் (குரூப் ஏ/பி உள்பட) ஆவர். விண்ணப்பிக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்க கூடாது.
10-ந் தேதி கடைசிநாள்
மேற்கண்ட தகுதியினை பூர்த்தி செய்தவர்கள் தங்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ இவை அனைத்தையும் வருகிற 10-ந் தேதிக்குள் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம்- 636001 என்ற முகவரிக்கு பதிவு/ விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு பெற்ற நேரடி முகவர்கள்/ கள அலுவலர்கள் சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் புணிபுரிய வேண்டும். ரூ.5 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். ஏனைய விவரங்கள், விண்ணப்பங்களை பெறுவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். யாருடைய விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கோட்ட கண்காணிப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் நியமனம் இலாகா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். தபால் கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.