சேலத்தில் இரும்பு தகடு திருடிய 2 பேர் கைது- ரெயில் வந்த போது தண்டவாளத்தில் வீசியதால் பரபரப்பு
சேலத்தில் இரும்பு தகடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரெயில் வந்த போது தண்டவாளத்தில் தகட்டை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரமங்கலம்:
சேலத்தில் இரும்பு தகடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரெயில் வந்த போது தண்டவாளத்தில் தகட்டை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சரக்கு ரெயில்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்த கந்தம்பட்டி அருகே நேற்று அதிகாலை 3.10 மணி அளவில் கரூர் ரெயில் தண்டவாள பாதையில் சரக்கு ெரயில் வந்தது. அப்போது மர்ம நபர் 2 பேர், தண்டவாள பாதையில் இரும்பு தகடை போட்டு விட்டு ஓடி மறைந்து கொண்டனர்.
ரெயிலை ஓட்டி வந்த என்ஜின் டிரைவர் கோபிநாத் என்பவர், இதை பார்த்து உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் அந்த இரும்பு தகட்டை தண்டவாளத்தில் இருந்து அகற்றினார். அதன்பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2 பேர் கைது
இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் ெரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கோபண்ணா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில், திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்கிற செல்வகணபதி (வயது 22), கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த மங்கு என்கிற கோவிந்தராஜ் (32) ஆகிய இருவரும் தண்டவாளத்தில் இரும்பு தகட்டை போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தி்ய மேல் விசாரணையில், இருவரும் வெள்ளி பட்டறையில் கூலி வேலை செய்து வந்ததும், கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் இரும்பு தகட்டை திருடி விற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக இரும்பு தகட்டை திருடி வந்த போது ரெயில் வந்ததை பார்த்த உடன், தகட்டை தண்டவாளத்தில் போட்டு விட்டு ஓடியதும் தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
ரெயிலை கவிழ்க்க சதி?
இதற்கிடையே தண்டவாளத்தில் இரும்பு தகடு கிடந்ததால் ரெயிலை கவிழ்க்க சதி நடந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தண்டவாளத்தில் கிடந்த தகடு திருடி செல்லப்பட்டதும், ரெயிலை கண்டதும் பயத்தில் தண்டவாளத்தில் வீசி சென்றது என்பதும் தெரிய வந்தது. அதன்பிறகே இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.