குற்றாலம் அருவி பகுதியில் கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆய்வு

குற்றாலம் அருவி பகுதியில் கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-04 20:20 GMT
தென்காசி:
குற்றாலம் அருவிகளில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

மிதமான தண்ணீர்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். கடந்த மாதம் தொடங்கிய சீசன் சில நாட்கள் மட்டும் நன்றாக இருந்தது. பின்னர் வெயில் அடித்தது. அதன்பிறகே ஒன்றிரண்டு நாட்கள் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் பிறகு மழை இல்லாததால் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுகிறது.  கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை தென்காசி குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் குற்றாலம் அருவி பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு, அரசு உத்தரவிட்ட பிறகு அனுமதி அளிக்கப்படும் என்றார். தற்போது நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் கோவில்கள் திறக்கப்படுகின்றன. இந்த சூழலில் குற்றாலம் அருவிகளில் கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்