மினி லாரி, லோடு ஆட்டோவில் 26 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 5 பேர் கைது
நெல்லையில் மினி லாரி, லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 26 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையில் மினி லாரி, லோடு ஆட்டோவில் 26 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
நெல்லை- மதுரை ரோட்டில் ரேஷன் அரிசி கடத்துவதாக நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி லாரிகள், லோடு ஆட்டோ ஆகியவற்றில் ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதில் இருந்த 26 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயன்றதாக அரிசி ஆலை உரிமையாளர் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி (வயது 42), கொம்பையா என்ற மணி (31), தங்கபாண்டி (34), மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தை சேர்ந்த சிவபாலன் (42), உத்தமபாண்டியன்குளத்தை சேர்ந்த மகராஜன் (40) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கீழப்பாட்டத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.