புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
புதுக்கோட்டை
மழை
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை காலத்தை போல வெயில் சுட்டெரிக்கிறது. நேற்றும் பகலில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து இடைவிடாமல் ஒரே சீராக பெய்தது.
பின்னர் தூறிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைகளை பிடித்தப்படி சென்றனர். இந்தநிலையில் இரவில் 8.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை தூறியபடி இருந்தது.
திருவரங்குளம்
இதேபோல, திருவரங்குளம், பூவரசகுடி, வேப்பங்குடி, திருக்கட்டளை, வம் பன் நால்ரோடு, கொத்தக்கோட்டை, தட்சிணாபுரம், வல்லத்திராக்கோட்டை, கத்தக்குறிச்சி, குளவாய்பட்டி, கீழையூர், காயாம்பட்டி, பொற்பனைக்கோட்டை, திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, கேப்பறை, தோப்புக்கொல்லை, கைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால், வெயில் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது. இதேபோல காரையூர் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.