200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிக்கிய விவசாயி; 3 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்

ராமநகர் அருகே 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிக்கிய விவசாயியை தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

Update: 2021-07-04 19:35 GMT
ராமநகர்:

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய விவசாயி

  பெங்களூரு-மைசூரு இடையே 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக ராமநகர் அருகே கொங்கானிதொட்டி கிராமத்தில் சாலையோரமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொங்கானிதொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜண்ணா நேற்று 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே சென்றார்.

  மேலும் ஆழ்துளை கிணற்றில் அவர் ஒரு பைப்புடன் இறங்கியதாக தெரிகிறது. அவர் 180 அடி ஆழத்தில் சென்ற போது திடீரென ஆழ்துளை கிணறு மூடி கொண்டது. இதனால் அவர் பூமிக்கு அடியில் சிக்கி கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் தான் கையில் வைத்திருந்த செல்போன் மூலம் தனது மகனை தொடர்பு கொண்டு ஆழ்துளை கிணற்றில் சிக்கி கொண்டதாகவும் தன்னை காப்பாற்றும்படியும் கூறியுள்ளார்.

உயிருடன் மீட்பு

  இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜண்ணாவின் மகன் உடனடியாக ராமநகர் புறநகர் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நேற்று மதியம் 12.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டினர்.

  மேலும் பூமிக்கு அடியில் தீயணைப்பு படையினர் ஆக்சிஜனை பொருத்தினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மதியம் 3.45 மணிக்கு ராஜண்ணாவை, தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

மேலும் செய்திகள்