காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெலகாவியில் காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-07-04 19:31 GMT
பெலகாவி:

காதலுக்கு எதிர்ப்பு

  பெலகாவி டவுன் சாகாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி (வயது 19). இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசவனஹள்ளி பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்தது. அப்போது கட்டுமான பணிக்கு வந்து இருந்த லட்சுமிகாந்த் என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் உண்டானது.

  இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்கொலை

  இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜோதி வீட்டைவிட்டு வெளியேறி லட்சுமிகாந்தை, பதிவு திருமணம் செய்து இருந்தார். இதுபற்றி அறிந்த 2 குடும்பத்தினரும் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்தனர். பின்னர் கணவர் வீட்டில் ஜோதி வசித்து வந்தார். அப்போது சாதியை கூறி ஜோதியை லட்சுமிகாந்த் குடும்பத்தினர் திட்டியதாக தெரிகிறது.

  இதனால் அவர் தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்தார். இந்த நிலையில் வேலைக்கு எதுவும் செல்லாமல் லட்சுமிகாந்த் தினமும் குடித்துவிட்டு வந்து ஜோதியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ஜோதி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சகாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்