ஜனநாயக நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி சொல்கிறார்
ஜனநாயக நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.;
மைசூரு:
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
மைசூருவுக்கு நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வந்தார். அவர் மைசூருவில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இம்மாதம் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஏற்கனவே 5 அவசர சட்டம் உள்பட 8 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது.
12 மசோதாக்கள்
இதுதவிர நாடாமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது. மேலும் நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளும், அதன் மீதான விவாதங்களும் நடைபெற உள்ளது. புதிய சட்டம் மற்றும் விதிகளுக்கு அங்கீகாரம் பெற இருப்பதால், எதிர்க்கட்சிகளுடன் கண்டிப்பாக விவாதம் நடைபெறும்.
எதிர்க்கட்சியினர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். அதற்கு பா.ஜனதா மந்திரிகள் தயாராக உள்ளனர். ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள், விமர்சனங்கள், கண்டனம், மசோதா பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
மழைக்கால கூட்டத்தொடர்
மக்களின் நலனை காப்பாற்றும் நோக்கத்துடன் அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. அதனால் இந்த மழைக்கால கூட்டத்தொடர் முக்கியமானது ஆகும். மழைக்கால கூட்டத்தொடரை நல்லபடியாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.
மடாதிபதியிடம் ஆசி
பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி சாமுண்டி மலை அடிவாரத்தில் இருக்கும் சுத்தூர் மடத்திற்கு சென்றார். அங்கு சென்று சுத்தூர் மடாதிபதியை சந்தித்து ஆசிபெற்றார்.