`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குளித்தலையில் வழிகாட்டும் பெயர் பலகை

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குளித்தலையில் வழிகாட்டும் பெயர் பலகை அமைக்கப்பட்டது.;

Update: 2021-07-04 18:28 GMT
குளித்தலை
வழிகாட்டும் பெயர் பலகை
கரூர் மாவட்டம், குளித்தலை நகரத்தில் உள்ள சுங்ககேட் பகுதியில் 4 திசைகளிலும் சாலைகள் உள்ளன. இந்த 4 திசைகளிலும் உள்ள சாலைகளின் வழியாக திருச்சி, கரூர், மணப்பாறை, முசிறி உள்பட பல ஊர்களின் மார்க்கமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய ஊர்களுக்கும், பல வெளி மாநிலங்களுக்கும் பஸ், லாரி, வேன், கார் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. 
இந்தநிலையில் குளித்தலை சுங்ககேட் வழியாக உள்ள நான்கு திசைகளில் உள்ள சாலைகளில் பயணம் செய்பவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊர்களுக்கு எந்த வழியாக பயணம்‌ செய்யவேண்டும்‌ என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டும் பெயர் பலகை சுங்ககேட் பகுதியில் அமைக்ககோரிக்கை எழுந்தது. 
நெடுஞ்சாலைத்துறை
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளித்தலை சுங்ககேட்-முசிறி செல்லும் சாலையில் வழிகாட்டும் பெயர் பலகை நெடுஞ்சாலைத்துறை மூலம் வைக்கப்பட்டது. ஆனால் குளித்தலை சுங்ககேட்-மணப்பாறை சாலையில் வழிகாட்டும் பெயர் பலகை வைப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் பெயர் பலகை வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது.
‘தினத்தந்தி’யில் செய்தி
 எனவே தாமதமாக நடைபெறும் இந்த பெயர்பலகை பொருத்தும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தினத்தந்தியில் கடந்த மாதம் 28-ந்தேதி செய்தி வெளியிடப்பட்டது‌. 
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை மூலம் குளித்தலை சுங்ககேட்- மணப்பாறை சாலையில் வழிகாட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க காரணமான தினத்தந்தி நாளிதழுக்கும், பெயர் பலகை வைத்த நெடுஞ்சாலைதுறையினருக்கும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்