காவிரி ஆற்றில் குளித்த கேட்டரிங் மாணவர் கதி என்ன?

காவிரி ஆற்றில் குளித்த கேட்டரிங் மாணவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update: 2021-07-04 18:25 GMT
நொய்யல்
கேட்டரிங் மாணவர்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தன் (வயது 17). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பொது முடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்தார். 
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அரவிந்தன் மற்றும் அவரது சித்தப்பா விவேக் (30), அரவிந்தனின் மாமா மகன் கவுதம் (17) ஆகிய 3 பேரும் குளிப்பதற்காக அரவிந்தன் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.
நீரில் மூழ்கினார்
பின்னர் காவிரி ஆற்றுப் பாலத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு 3 பேரும் காவிரி ஆற்றிற்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அரவிந்தன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அரவிந்தனை பார்த்தபோது காவிரி ஆற்றில் காணவில்லை. நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் சித்தப்பா விவேக் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுக்கு விரைந்து வந்து பிளாஸ்டிக் படகு மூலம் காவிரி ஆறு முழுவதும் இரவு வரை தேடுதல் வேட்டை நடத்தியும் அரவிந்தன் கிடைக்கவில்லை. 
கதி என்ன?
மேலும், இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் அரவிந்தன் கதி என்னானது என்று தெரியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி விசாரணை நடத்தி வருகின்றார். அரவிந்தனை தேடும் பணியில் இன்றும் (திங்கட்கிழமை) நடைபெறும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்