சாவில் சந்தேகம் இருப்பதாக மகன் புகார்:முதியவர் உடலை கைப்பற்றிய போலீசார்

எஸ்.புதூர் அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக 2-வது மகன் கொடுத்த புகாரில் முதியவர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Update: 2021-07-04 17:58 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக 2-வது மகன் கொடுத்த புகாரில் முதியவர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதியவர் சாவு

எஸ்.புதூர் அருகே உள்ள மேலவண்ணாரிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 75). இவருக்கு சவுந்தர்ராஜ், சக்திவேல், தங்கராஜ், செல்வராஜ் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜின் மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்த பிறகு துரைராஜ் மூத்த 2 மகன்களான சவுந்தர்ராஜ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் வீட்டிலும் மாறி, மாறி இருந்து வந்துள்ளார்.
 இந்த நிலையில் பொன்னமராவதியில் உள்ள மூத்த மகன் சவுந்தர்ராஜ் வீட்டில் இருந்த துரைராஜூக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக துரைராஜ் மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்தார்.அங்கு அவர் நேற்று இறந்தார்.

போலீசில் புகார்

 அதனை தொடர்ந்து துரைராஜின் 2-வது மகன் சக்திவேல் தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று இறந்த துரைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்