3 பேரை கொன்றதால் அடைக்கப்பட்ட காட்டு யானை மரக்கூண்டில் இருந்து விடுவிப்பு

சேரம்பாடியில் 3 பேரை கொன்றதால் அடைக்கப்பட்ட காட்டு யானை 5 மாதங்களுக்கு பிறகு மரக்கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

Update: 2021-07-04 17:35 GMT
கூடலூர்

சேரம்பாடியில் 3 பேரை கொன்றதால் அடைக்கப்பட்ட காட்டு யானை 5 மாதங்களுக்கு பிறகு மரக்கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. கரும்பு, பழங்களை அளித்து வனத்துறையினர் வரவேற்றனர்.

3 பேரை கொன்றதால் அடைப்பு

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் கடந்த ஆண்டு தந்தை, மகன் உள்பட 3 பேரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்தனர்.

பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் முகாமில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் காட்டு யானையை வனத்துறையினர் அடைத்தனர். சுதந்திரமாக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை மரக் கூண்டுக்குள் அடைபட்டதால் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காட்டு யானையை பராமரிக்க பாகன்கள் நியமிக்கப்பட்டனர். தினமும் யானைக்கு பசுந்தழைகள் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் யானையின் மூர்க்கத்தனமான குணம் மாறி சாதுவான நிலைக்கு வந்தது.

சிறப்பு பூஜை

இதைத்தொடர்ந்து உணவு வழங்கும் பாகன்களின் கட்டுப்பாட்டுக்கு காட்டு யானை வந்தது. இதை உணர்ந்த பாகன்கள் சில தினங்களுக்கு முன்பு மரக்கூண்டுக்குள் சென்று காட்டு யானையை பழக்கப்படுத்தினர். 

பின்னர் மரக்கூண்டில் அடைத்து 5 மாதங்கள் ஆனதால் காட்டு யானையை வெளியே கொண்டுவர வனத்துறையினர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக வனத்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் உரிய அனுமதியின் பேரில் மரக்கூண்டில் இருந்து காட்டு யானை நேற்று காலை 10.15 மணிக்கு வெளியே அழைத்து வரப்பட்டது. முன்னதாக மரக் கூண்டுக்குள் இருந்த காட்டு யானைக்கு மலர் மாலை மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் காட்டு யானைக்கு கரும்பு வழங்கி யானை வரவேற்றார்.

கூண்டில் இருந்து விடுதலை

இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முகாமில் உள்ள பிற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மரக்கூண்டை சுற்றி நிறுத்தப்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் மரக்கூண்டை திறந்தனர்.

 தொடர்ந்து காட்டு யானை கூண்டில் இருந்து மெதுவாக வெளியேறி விடுதலையானது. அப்போது தன்னை தினமும் பராமரித்து வந்த பாகன் கையில் வைத்திருந்த குச்சியை தனது தும்பிக்கையால் பிடித்தவாறு காட்டு யானை பின் தொடர்ந்து வந்தது.

அப்போது புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பழங்களை அளித்து வரவேற்றனர். பின்னர் முகாமில் உள்ள ஒரு மரத்தில் காட்டு யானை இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் உள்ள பச்சை புற்களை மேய்ந்தவாறு இருந்தது. நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் தயானந்தன், விஜயன், சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்