பாதாள சாக்கடை குழாய்களை மாற்றும் பணி மீண்டும் தொடங்கியது
ஊரடங்கு தளர்வு காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
ஊட்டி
ஊரடங்கு தளர்வு காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
பணி பாதிப்பு
ஊட்டி நகராட்சியில் கோடப்பமந்து கால்வாய் பிரதான கால்வாயாக உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மொத்தம் உள்ள 36 வார்டுகளில் 27 வார்டுகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
வீடுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் கோடப்பமந்து கால்வாயின் இருபுறமும் வடிந்து செல்லும் வகையில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்வாயை தூர்வாரும் போது, குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் கலந்து ஊட்டி ஏரி மாசுபடும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்க கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
கால்வாயில் படிந்த மண் தூர்வாரப்பட்டு, நடுவே பழைய குழாய்களை அகற்றிவிட்டு குழாய்கள் பொருத்துவதற்காக குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு மேல் பணி பாதிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வு
ஊரடங்கால் கட்டுமான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் பாதாள சாக்கடை குழாய்கள் வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அதன் காரணமாக ஓராண்டை கடந்தும் பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுமான பணிகள் நடைபெறவும், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. தற்போது ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி, ஆழ்துளை துவாரங்கள் கட்டும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் குழி தோண்டிய இடங்களில் மண்மூடி காணப்படுகிறது. இதனை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் தொழிலாளர்கள் கான்கிரீட் கலவை கொண்டு புதிதாக ஆழ்துளை துவாரங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மற்ற இடங்களிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.