பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?-விவசாயிகள் கோரிக்கை

பென்னாகரத்தில் 55 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-04 17:22 GMT
பென்னாகரம்:
கால்நடை மருந்தகம்
பென்னாகரம் பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் சூழ்ந்த பகுதி ஆகும். இந்த பகுதி மக்கள் விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். பென்னாகரம் தொகுதியில் மலைகளும், வனப்பகுதியும் பெருமளவில் உள்ளதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்க்கும் தொழிலை பொதுமக்கள் பிரதானமாக செய்து வருகின்றனர்.
அதிக அளவில் கால்நடைகள் வளர்க்கப்படுவதால் அவை நோய் வாய்ப்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பென்னாகரத்தில் 1960-ம் ஆண்டு சமுதாய நல திட்டத்தின் கீழ் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் மருந்தகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் கட்டுமான பணிகள் முடிந்து 1964-ம் ஆண்டு, தமிழக முதல்-அமைச்சராக இருந்த பக்தவச்சலத்தால் இந்த மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த கால்நடை மருந்தகத்தில் பென்னாகரம், மாங்கரை, செங்கனூர், பருவதனஅள்ளி, கோடியூர், சத்தியநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளுக்கு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை ஊசி, பொது சிகிச்சை, மடிவீக்கம், குடற்புண் நீக்குதல், காய்ச்சல் மற்றும் வயிறு வீக்கம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கட்டிடங்கள் சேதம்
பென்னாகரம் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு 55 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடத்தின் சிமெண்டு தளங்கள் பெயர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மருந்தகத்தில் உள்ள கால்நடைகள் பரிசோதனை கூடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்தும், தூண்கள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. குறிப்பாக அலுவலக கட்டிடம், பரிசோதனை கூடம் ஆகியவை இடிந்து விழும் நிலையில் உள்ளன.
விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளுக்கு தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்ந்தாலும், உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும் போது எக்ஸ்-ரே எடுக்கும் வசதி இல்லாததால் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மபுரி மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கோரிக்கை
இந்த கால்நடை மருந்தகத்தில் உதவி கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் என 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே பென்னாகரம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதற்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் கால்நடை மருந்தகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பி கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்