வேலூர் பழைய பஸ் நிலையத்தில்தடையை மீறி நுழையும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை. பொதுமக்கள் கோரிக்கை
வேலூர் பழைய பஸ் நிலையத்தில்தடையை மீறி நுழையும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை
வேலூர்-
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆற்காடு, அணைக்கட்டு, அடுக்கம்பாறை, பள்ளிகொண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பஸ்நிலையங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறினால் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக அறிவிப்பு பலகை பஸ்நிலையத்தில் 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி பஸ்நிலையத்தில் ஆட்டோக்கள் நுழைந்து பயணிகளை ஏற்றி செல்லும் செயலில் ஈடுபட்டு வருகிறது. சில ஆட்டோக்கள் பஸ்கள் வந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் தடையை மீறி பஸ்நிலையத்தில் நுழைந்து பயணிகளை ஏற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
ஆனாலும் இந்த செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தடையை மீறும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.