திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-04 16:52 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மின்மோட்டாாில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சாிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஆவினங்குடி-விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்