சிதம்பரம் அருகே வயலில் புகுந்த முதலை பிடிபட்டது

சிதம்பரம் அருகே வயலில் புகுந்த 15 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது.;

Update: 2021-07-04 16:49 GMT
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஆற்றில் உள்ள கிளை வாய்க்காலில் இருந்து அவ்வப்போது, முதலைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அந்த முதலைகளை வனத்துறையினர் பிடித்து நீர்த்தேக்கத்தில் விடுவதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நேற்றும் ஒரு முதலை பிடிபட்டது. அதன் விவரம் வருமாறு:-

பிடிபட்டது

சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் உள்ள நெல் வயலில் நேற்று காலை முதலை ஒன்று கிடந்தது. இதைபார்த்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், வனவர் அஜிதா தலைமையில் வனக்காப்பாளர் அனுசியா, வனக்காவலர்கள் செந்தில்குமார், பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் கயிறு மூலம் முதலையை பிடித்தனர். இந்த முதலை 15 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இதையடுத்து பிடிபட்ட முதலை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்