கடலூர் மாவட்டத்தில் 1,640 கோவில்கள் இன்று திறப்பு
பக்தர்களின் வசதிக்காக கடலூர் மாவட்டத்தில் 1,640 கோவில்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. ஆனால் அர்ச்சனை செய்ய தடை நீடிக்கிறது.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த கூடுதல் தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதில் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அர்ச்சனை செய்ய தடை நீடிக்கிறது. அதேவேளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் சாமியை வழிபட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 1,640 கோவில்கள் இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் வசதிக்காக திறக்கப்படுகிறது. இந்த கோவில்களில் பக்தர்கள் சென்று சாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
சுத்தம் செய்யும் பணி
இதற்கிடையில் கோவில்களில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவில்களை சுத்தம் செய்யும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதேபோல் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் வர வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் கூறினார்.
இதேபோல் தேவாலயங்கள், மசூதிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேவாலயங்கள், மசூதிகளிலும் தூய்மை பணி நடக்கிறது.