தாராபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து இன்று முதல் 41 அரசு பஸ்கள் இயக்கம்
தாராபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து இன்று முதல் 41 அரசு பஸ்கள் இயக்கம்
தாராபுரம்
அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 41 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தாராபுரம் கிளை மேலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.
தயார் செய்யும் பணிகள்
கொரோனா 2-ம் அலை காரணமாக கடந்த மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. அன்று முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் கொரோனா தொற்று குறைந்ததால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் 11 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
7-ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையிலும் கொரோனா தொற்று குறைந்ததால் இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துஉத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்துக்கழக தாராபுரம் கிளையில் உள்ள 86 பஸ்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து இருக்கைகள் தூய்மைப்படுத்தப்பட்டு டயர் காற்று பிடிக்கப்பட்டு என்ஜின் ஆயில், டீசல் ஆகியவற்றை நிரப்பும் பணியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
41 பஸ்கள் இயக்கம்
மேலும் தாராபுரம் போக்குவரத்துக்கழக கிளை முழுவதும் சங்க தொழிலாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தாராபுரத்தில் முதல்கட்டமாக இன்று 25 புறநகர் பஸ்கள் 16 நகர்புற பஸ்கள் என மொத்தம் 41 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் டிரைவர்கள், கண்டக்டர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவி வாகனத்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் பஸ்சில் பயணம் செய்வோர் முக கவசங்கள் அணிந்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து கிளை மேலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
காங்கேயம்
இதேபோல் காங்கேயம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள அரசு பஸ்கள் பழுது நீக்கும் பணி மற்றும் சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்று பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து காங்கேயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் காங்கேயத்தில் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பஸ் நிலையம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த பணிகளை காங்கேயம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.