காங்கேயத்தில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது
காங்கேயத்தில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது
காங்கேயம்:
காங்கேயத்தில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு மணி நேரம் பலத்த மழை
காங்கேயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டியது. இதை தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 4 மணிக்கு தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாகக் கொட்டித்தீர்த்தது.
காங்கேயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து சுமார் ஒரு அடி அளவுக்கு சாலையில் தண்ணீர் ஓடியது.
தேங்கிய மழைநீர்
இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. மேலும் சாலையில் அதிகளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். குறிப்பாக கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதப்பது போல சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதேபோல காங்கேயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசி இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.