புது மண்ணியாறு வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்கு செடிகள் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொள்ளிடம் அருகே புது மண்ணியாறு வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்கு செடிகள் தூர்வாரப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருவது புது மண்ணியாறு வாய்க்கால் ஆகும். இது கும்பகோணம் அருகே காவிரியில் இருந்து மணஞ்சேரி என்ற இடத்தில் பிரிந்து பல கிராமங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வாய்க்காலாக இருந்து கொள்ளிடம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகாலாக இருந்து இறுதியில் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது.
மழை காலங்களில் கொள்ளிடம் பகுதியில் அனைத்து நிலங்கள் மற்றும் குடியிருப்புகளிலும் தேங்கும் மழைநீரை கடலுக்குள் எளிதில் கொண்டு சேர்க்கும் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது.
இந்த வாய்க்காலில் தற்காஸ் கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்காலில் காட்டாமணக்கு செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. கடந்த ஆண்டு இந்த வாய்க்கால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படாமல் விடு்பட்டு விட்டது. இதனால் இந்த வாய்க்காலில் காட்டாமணக்கு செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கடைமடை பகுதிக்கு சென்று சேரவேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் மண்டி கிடக்கும் காட்டாமணக்கு செடிகளை அகற்றி, வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.