மணப்பாறை அருகே பரிதாபம்: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை கணவர், நாத்தனார் கைது
மணப்பாறை அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை,
மணப்பாறை அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவன்-மனைவி பிரச்சினை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள வரதன்கோன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி நித்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் மகள் நல்லகண்ணு (6), மகன் ரோகித் (4).
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நித்யா மணப்பாறை அருகே பொன்னம்பலத்தான் பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்ததோடு, தனியார் பஞ்சாலை ஒன்றுக்கு வேலைக்கு சென்றுவந்துள்ளார்.
விஷம் கலந்த டீ
கடந்த 30-ந்தேதி கணவர் வீட்டுக்கு நித்யா சென்றார். அப்போது, மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா மீண்டும் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்தநிலையில் மிகுந்த மனவேதனையுடன் இருந்த நித்யா, கடந்த 1-ந்தேதி காலை பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலிகளை கொல்ல பயன்படுத்தும் பசையை (விஷம்) டீயில் கலந்து தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தனது சகோதரருடன் எப்போதும் போல் வேலைக்கு சென்று விட்டார்.
3 பேர் சாவு
பின்னர் அன்று மதியம் எலி பசை சாப்பிட்டது தொடர்பாக தனது சகோதரனிடம் நித்யா கூறி உள்ளார். உடனே குடும்பத்தினர், நித்யாவையும் அவருடைய குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் நித்யா நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று அதிகாலை, அவருடைய மகன் ரோகித்தும், மகள் நல்லகண்ணும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உருக்கமான கடிதம்
3 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நித்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது பெற்றோருக்கு எழுதி வைத்த உருக்கமான கடிதம் இருந்ததை போலீசாரிடம் குடும்பத்தினர் கொடுத்தனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் மகள் நித்யா எழுதிக்கொண்டது. இந்த ஜென்மத்தில் உனக்கு மகளாய் பிறந்ததற்கு நான் ரொம்ப புண்ணியம் செய்திருக்கனும். ஆனா எனது வாழ்க்கையில் ரொம்ப வெறுப்பாக இருப்பது எனது கல்யாண வாழ்க்கை தான். எனக்கு மலடினு பேரு வராம பிள்ளைகளை கொடுத்த கடவுள், அதுங்களுக்கு நல்ல அப்பாவை கொடுக்கல.
சாவுக்கு காரணம்
பிள்ளைகளையும், என்னையும் ரொம்ப வெறுப்பா நினைக்கிற எனது கணவர் கிட்ட வாழ்வது ரொம்ப கஷ்டம். ஏன்னா, இது எல்லாத்துக்கும் காரணம் என் கணவரின் அக்கா தான். என்னை எவ்வளவு கொடுமை பண்ணமுடியுமோ அவ்வளவு கொடுமை செய்தாங்க. என் சாவுக்கு காரணம் என் கணவரும், அவுங்க அக்காவும் தான். நான் சாவதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் என் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். என் பிள்ளைகளின் சாவுக்கு ஒரு அர்த்தம் வேணும். அதனால எதுக்காக என்னை சித்ரவதை செய்தார்களோ அந்த சொத்தை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைக்கணும், எங்களை கொன்ற எனது கணவருக்கு, நாங்க போடுற பிச்சை அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்கு 5 சென்ட் இடம் மட்டும் தான் தரனும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், நாத்தனார் கைது
இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவம் குறித்து தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நித்யா தற்கொலை செய்து கொண்டதற்கு அவருடைய கணவர் முருகேசன் மற்றும் நாத்தனார் செல்லமணி (40) ஆகியோர் தான் காரணம் என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றி, முருகேசன் மற்றும் அவருடைய அக்காள் செல்லமணியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.