விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை- பணம் கொள்ளை

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-03 16:28 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் வழுதரெட்டி சுப்பிரமணியசாமி நகரில் வசித்து வருபவர் வேலாயுதம் (வயது 62), விவசாயி. இவர் கடந்த 28-ந் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி சரோஜாவுடன் சொந்த ஊரான செம்மார் கிராமத்திற்கு சென்று விட்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை வழுதரெட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் சிலாப்பில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்து தெரியவந்தது. 

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

இதுகுறித்து வேலாயுதம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்