பிரதமரை சந்தித்த பா.ஜ.க. அமைச்சர்கள் புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை முன் வைக்கவில்லை

பிரதமரை சந்தித்த போது புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை முன் வைக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

Update: 2021-07-02 20:35 GMT
புதுச்சேரி, ஜூலை.3-
பிரதமரை சந்தித்த போது புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை முன் வைக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி
புதுவை மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து பெற்று டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் போட வேண்டும். டாக்டர்களுக்குரிய பாதுகாப்பு, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை அரசு வழங்க வேண்டும். 
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்.
புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்று உள்ளனர். பா.ஜ.க.வில் முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தெரிகிறது. 
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறவே ரங்கசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். பிரதமரை சந்தித்தவர்கள் மாநில அந்தஸ்து குறித்து எதையும் பேசவில்லை. மாநில அந்தஸ்து பெறுவதில் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இதன் மூலம் மக்களை பா.ஜ.க. வஞ்சிக்கிறது.
கியாஸ் விலை உயர்வு
மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தி வருகிறது. சமையல் கியாஸ் விலை கடந்த 6 மாதங்களில் 6 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 
எரிபொருட்களின் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி சைக்கிள் ஊர்வலம், கையெழுத்து இயக்கம் நடைபெறும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் அது சீர்குலைந்துள்ளது. வெடிகுண்டு, நகைப்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
இவ்வாறு அதில் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்