துரைப்பாக்கத்தில் சினிமா பைனான்சியரை கட்டிப்போட்டு நகை-பணம் பறிப்பு - நண்பர் உள்பட 2 பேர் கைது
சினிமா பைனான்சியரை வீட்டுக்குள் அடைத்து கட்டிப்போட்டு நகை, பணத்தை பறித்த நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சினிமா பைனான்சியரும் கைதானார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நிர்மல் ஜெமினி கண்ணன் (வயது 33). இவர், தன்னுடைய மனைவி கிருத்திகா (28) உடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும், சென்னையை சேர்ந்த அரிகிருஷ்ணன் (48) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர்.
இதற்கிடையில் நிர்மல் ஜெமினி கண்ணன், அரிகிருஷ்ணனிடம் ரூ.13 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் கணவன்- மனைவி இருவரும் அரிகிருஷ்ணனை ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதனால் அரிகிருஷ்ணன், தன்னுடைய நண்பரும், சினிமா பைனான்சியருமான சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லயன் குமார் (48) என்பவரிடம் கூறினார். அவர், கடந்த பிப்ரவரி மாதம் துரைப்பாக்கத்தில் உள்ள நிர்மல் ஜெமினி கண்ணன் வீட்டுக்கு சென்று பஞ்சாயத்து பேசி சினிமாவுக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் தம்பதிகளிடம் இருந்து வாங்கிய பணம், நகை, பொருட்களை தனது நண்பர் அரிகிருஷ்ணனிடம் கொடுக்காமல் லயன் குமாரே வைத்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன், நிர்மல் ஜெமினி கண்ணன் தம்பதியுடன் சேர்ந்து பைனான்சியரிடம் இருந்து அவற்றை வாங்க திட்டமிட்டார். இதற்காக கடந்த 27-ந் தேதி பைனான்சியர் லயன் குமாருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து, துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாட திட்டம் போட்டுள்ளோம் என்று ஆசை வார்த்தைகள் கூறி வரவழைத்தனர்.
அதை நம்பி தனது பிறந்தநாளை கொண்டாட வந்த பைனான்சியர் லயன் குமாரை, நிர்மல் ஜெமினி கண்ணன், அவருடைய மனைவி கிருத்திகா மற்றும் அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டுக்குள் அடைத்து வைத்து, கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 18 பவுன் தங்க நகை, கார் சாவி ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.
இதற்கிடையில் நிர்மல் ஜெமினி கண்ணன் வீட்டில் இருந்து யாரோ ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின்பேரில் துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டில் அடைத்து கட்டிப்போட்டு இருந்த லயன் குமாரை மீட்டனர்.
இது பற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணன், நிர்மல் ஜெமினி கண்ணன் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் கிருத்திகாவுடன் உல்லாசமாக இருக்கவே அரிகிருஷ்ணன், நிர்மல் ஜெமினி கண்ணனுக்கு பணம் கொடுத்ததாகவும், ஆனால் அரிகிருஷ்ணனை கிருத்திகா தவிர்த்ததால் கொடுத்த பணத்தை திருப்பி வாங்க லயன் குமாரிடம் சென்றார். ஆனால் அவர் ஏமாற்றியதால் ஆத்திரத்தில் இருந்த அரிகிருஷ்ணன், நிர்மல் ஜெமினி கண்ணன், கிருத்திகா தம்பதியுடன் இணைந்து லயன் குமாரிடம் இருந்து நகை, பணத்தை பறிக்க முயன்றதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் கிருத்திகா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் நிர்மல் ஜெமினி கண்ணன் தம்பதியிடம் நகை, பணம் பறித்த வழக்கில் பைனான்சியர் லயன் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.