ரெயில்வே ஊழியரிடம் ரூ.51 லட்சம் மோசடி: முன்னாள் முதல்-அமைச்சரின் கமாண்டோ படை வீரர் கைது

சென்னை தலைமைச்செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரெயில்வே ஊழியரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த புகாரில் முன்னாள் கமாண்டோ படை வீரர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-02 06:52 GMT
சென்னை,

சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ரெயில்வே அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் கமாண்டோ படை வீரராக வேலை செய்து, பின்னர் தானாக முன் வந்து விருப்ப ஓய்வு பெற்ற அழகிரிபாலன் (வயது 37) என்பவரிடம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளிடம் எனக்கு பழக்கம் உள்ளது என்றும், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (ஏ.பி.ஆர்.ஓ.) வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றும், அந்த வேலையை எனது மகன் உள்பட சிலருக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் வாங்கினார்.

பின்னர் அந்த வேலையை வாங்கித்தராமல் ரூ.51 லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மோசடி நபர் அழகிரிபாலன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த இவர், முன்னாள் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் கமாண்டோ படை வீரராக வேலை பார்த்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்