போலீஸ் நிலைய கழிவறையில் பிளேடால் உடலை அறுத்துக்கொண்ட கைதியால் பரபரப்பு
சென்னை கோயம்பேட்டில் போலீஸ் நிலைய கழிவறையில் கைதி ஒருவர் பிளேடால் உடலை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேட்டில் கையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த சென்டிரல் அல்லிகுளம் பகுதியை சேர்ந்த மிட்டாய் என்ற விக்கி (வயது 24), திண்டுக்கல்லை சேர்ந்த அருண் (24), அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (24) ஆகியோரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற விக்கி, திடீரென பிளேடால் தனது உடலில் அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த பிளேடை பிடிங்கிய போலீசார், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். பிளேடால் அறுத்துக்கொண்டதில் விக்கிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.