சிறுமியின் குடும்பத்தினரை காலில் விழ வைத்து ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம் - பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

கும்மிடிப்பூண்டி அருகே போலீசில் புகார் கொடுத்ததால் சிறுமியின் குடும்பத்தினரை காலில் விழ வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் சுமூக தீர்வு காணப்பட்டது.;

Update: 2021-07-02 02:45 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அந்த ஊரை சேர்ந்த வாலிபருடன் திருமணமாகிவிட்டதாக சிலர் முன்விரோதம் காரணமாக அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. அது உண்மை இல்லை என்று தெரிந்த நிலையில், அந்த சிறுமியை அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் முயன்றுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியின் குடும்பத்தினர், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து கிராமத்தை சேர்ந்த 5 பேர் மீது ஆரம்பாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊர் கட்டுபாட்டை மீறி போலீஸ் நிலையம் சென்றதால் சிறுமியின் குடும்பத்தினரை கிராம மக்கள் ஒதுக்கி வைத்தனர். மன்னிப்பு கேட்டு கிராம பெரியவர்களின் காலில் விழவைத்து ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்ததாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர்.

இதனையடுத்து நேற்று மேற்கண்ட கிராமத்தில் பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரீத்து, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய மாவட்ட நிர்வாகி ஞானசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம மக்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினரும் மனம் விட்டு பேசிய நிலையில் தவறை உணர்ந்து சமாதானம் ஏற்பட்டது. சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து இது போன்ற பிரச்சினைகள் இனி எந்த காலத்திலும் தங்களது கிராமத்தில் ஏற்படாது எனவும் அவர்கள் உறுதி அளித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தனர்.

மேலும் செய்திகள்