சென்னிமலை அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற பெண் கள்ளக்காதலனுடன் கைது; பரபரப்பு வாக்குமூலம்
சென்னிமலை அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.;
சென்னிமலை
சென்னிமலை அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
வேன் டிரைவர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே உள்ள காவிரிபுரம் தெலுங்கனூர் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி (30) என்ற மனைவியும், கவுசிக் (8) என்ற மகனும், மேகனாஸ்ரீ (5) என்ற மகளும் உள்ளனர்.
குழந்தைவேல் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஈங்கூரை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி காலையில் குழந்தைவேல் தனது வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பின்னர் அவரது உறவினர்களின் உதவியுடன் குழந்தைவேலுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேட்டூர் அணை அருகே உள்ள தெலுங்கனூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சரண்
இந்தநிலையில் காயங்களுடன் பிணமாக கிடந்த குழந்தைவேலுவின் உடலை பார்த்த அவரது அண்ணன் மாதேஸ் (42) என்பவர் குழந்தைவேலுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் வெள்ளோடு கிராம நிர்வாக அலுவலர் ஆல்பர்ட் அசோக்குமாரிடம் கவியரசு (35) என்பவர் சரண் அடைந்தார். மேலும் அவர் வேன்டிரைவர் குழந்தைவேலுவை நானும், அவருடைய மனைவி தனலட்சுமியும் சேர்ந்து கொலை செய்ததாக அவரிடம் தெரிவித்தார். அவர் கவியரசுவை சென்னிமலை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
இதனைத்தொடர்ந்து போலீசார் கவியரசிடம் விசாரணை நடத்தினர். போலீசில் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பெருந்துறை ஆர்.எஸ். அருகே புங்கம்பாடி, சாணார்பாளையத்தை சேர்ந்த எனக்கும், குழந்தை வேலுவின் மனைவி தனலட்சுமிக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் எங்கள் இருவரையும் தனலட்சுமியின் கணவர் குழந்தைவேல் கண்டித்தார். எனவே குழந்தைவேலுவை கொலை செய்ய நானும், தனலட்சுமியும் முடிவு செய்தோம்.
கழுத்தை இறுக்கி கொலை
சம்பவத்தன்று நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி குழந்தை வேல் வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டில் இருந்தார். திடீரென நான் குழந்தைவேலுவை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி தலையணையை முகத்தில் வைத்து அமுக்கினேன்.
அப்போது தனலட்சுமி குழந்தைவேலுவின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதில் மூச்சுதிணறிய குழந்தைவேல் இறந்து விட்டார்.
கள்ளக்காதலனுடன் பெண் கைது
குழந்தைவேலுவின் உடலில் இருந்த காயத்தை பார்த்து அவரது அண்ணன் மாதேஸ் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் எப்படியும் சிக்கிவிடுவோம் என நினைத்த நான் போலீசாருக்கு பயந்து சரண் அடைந்துவிட்டேன். இவ்வாறு கவியரசு அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
கவியரசுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் குழந்தைவேலுவின் மனைவி தனலட்சுமி மற்றும் கவியரசுவை கைது செய்தனர். பின்னர் இருவரையும் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து கவியரசு கோபி சிறையிலும், தனலட்சுமி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.