ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. ராஜினாமா முடிவு - சபாநாயகரிடம் நாளை கடிதம் கொடுக்கிறார்

பாலியல் வழக்கில் சிக்கியதால் மந்திரி பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை நாளை (சனிக்கிழமை) ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் சபாநாயகரிடம் வழங்க உள்ளார்.;

Update: 2021-07-01 21:22 GMT
பெங்களூரு:

ரமேஷ் ஜார்கிகோளி

  முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர் ெபலகாவி மாவட்டம் கோகாக் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

  பாலியல் வழக்கில் சிக்கியதை அடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீதான பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் கொடுத்த பெண்ணையே ஹனிடிராப் வழக்கில் சிக்கவைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரமேஷ் ஜார்கிகோளியை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நற்சான்றிதழ் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் வழக்கால் சிக்கல்

  இந்த பாலியல் வழக்கில் 3 மந்திரிகள் கூட்டு சேர்ந்து ரமேஷ் ஜார்கிகோளியை சிக்கி வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு முடிந்து நற்சான்றிதழ் கிடைத்ததும், மந்திரி பதவி வழங்குவதாக ரமேஷ் ஜார்கிகோளியிடம் பா.ஜனதா உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் பாலியல் வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அது ரமேஷ் ஜார்கிகோளிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்ய...

  இந்த நிலையில் பா.ஜனதா மந்திரிகள் சிலரின் சதி திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள ரமேஷ் ஜார்கிகோளி நாளை (சனிக்கிழமை) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதுதொடர்பான கடிதத்தை சபாநாயகர் காகேரியிடம் வழங்க இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

  அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த மந்திரிகளில் ஒருவரான பசவராஜ் பொம்மை மற்றும் அவரது சகோதரர் பாலச்சந்திர ஜார்கிகோளி எம்.எல்.ஏ. ஆகியோர் இறங்கியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்கும் மனநிலையில் ரமேஷ் ஜார்கிகோளி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா ஆட்சி

  ரமேஷ் ஜார்கிகோளி கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோகாக் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்களில் இவர் முக்கியமானவர்.

  எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அமைந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி கைகூடாத நிலையில், ரமேஷ் ஜார்கிகோளி மூலமாக 17 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சி அரியணையில் ஏறியது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் செய்திகள்