கே.என்.பாளையம், புஞ்சைபுளியம்பட்டியில் வாகன சோதனை மது கடத்திய 5 பேர் கைது
கே.என்.பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் மது கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கே.என்.பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் மது கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.என்.பாளையம்
பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம் வன சோதனைச்சாவடி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்களிடம் 25 கர்நாடக மதுபாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 38), ராஜேந்திரன் (40), ஜோதிகுமார் (30) என்பதும், இவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்த 25 கர்நாடக மதுபாக்கெட்டுகளை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 கர்நாடக மதுபாக்கெட்டுகளையும், மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அவர்களிடம் 20 மது பாட்டில்கள் இருந்ததை பார்த்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர்கள் நல்லூரை சேர்ந்த யுவராஜ் (28), புஞ்சைபுளியம்பட்டி பாரதி வீதியை சேர்ந்த ராஜேஸ்குமார் (30) என்பதும், இவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து 20 மதுபாட்டில்களை கடத்தி இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும்’ தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வாரச்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர் குருவரெட்டியூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (35) என்பதும், சாராயத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்த 3 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.