சென்னிமலை அருகே மீண்டும் அகழாய்வு தொடங்கியது கொடுமணலில் பழங்கால கிணறு-கல்லறைகள் கண்டுபிடிப்பு; பாசிமணிகள்-கலைப்பொருட்களும் கிடைத்தன
சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வில் பழங்கால கிணறு, கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பாசிமணிகள் மற்றும் கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன.
சென்னிமலை, ஜூலை.2-
சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வில் பழங்கால கிணறு, கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பாசிமணிகள் மற்றும் கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன.
அகழாய்வு மீண்டும் தொடங்கியது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் பகுதியில் அகழாய்வு பணி மீண்டும் தொடங்கியது. இதில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் ஆற்றங்கரை பகுதியில் நடந்த அகழாய்வில் இரும்பு உருக்கும் பட்டறை, கல்மணிகள் மற்றும் குறியீடுகளுடன் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
கொடுமணல் கிராமத்தில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன், அந்த பகுதி வணிகத்திலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் இருந்ததால் 1981-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தது.
பழங்கால பொருட்கள்
ஆனால் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய 8-வது அகழாய்வு பணியில் தான் ஏராளமான பழங்கால பொருட்களை கண்டு பிடித்தனர்.
அப்போது தொழிற்கூடங்கள் இருந்த பகுதி மற்றும் பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதிகளை கண்டறிந்து அங்கு ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்களையும் எடுத்தனர். தொடர்ந்து 9-வது அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தொடங்கியது. பின்னர் ஊரடங்கு காரணமாக 10-5-2021 முதல் பணிகள் நிறுத்தப்பட்டது.
கொரோனா பரிசோதனை
இந்த நிலையில் மீண்டும் அகழாய்வு பணி தமிழக அரசின் உத்தரவுப்படி அகழாய்வு துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக அகழாய்வு பணியில் ஈடுபடும் உள்ளூர் தொழிலாளர்கள் அனைவருக்கும் அங்கேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தற்போது ஏற்கனவே தொழிற்கூடங்கள் இருந்த இடம், இதனை ஒட்டிய இடம் மற்றும் பழைய சிவியார்பாளையம் என 3 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளது.
கல்லறைகள் கண்டுபிடிப்பு
இதுகுறித்து தினத்தந்தி நிருபரிடம் தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் கூறியதாவது:-
கொடுமணல் பகுதியில் நடந்த அகழாய்வில் 3 வகையான பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகளை கண்டு பிடித்துள்ளோம். இதில், முதுமக்கள் தாழிகளை மட்டும் வைத்து அடக்கம் செய்தது, முதுமக்கள் தாழியுடன் பலகை கற்களை வைத்து மூடி அடக்கம் செய்தது மற்றும் வெறும் பலகை கற்களை மட்டும் வைத்து அடக்கம் செய்தது என 3 முறைகளில் இறந்தவர்களை புதைத்துள்ளனர்.
தற்போது பழைய சிவியார்பாளையம் என்ற இடத்தில் 5 இடங்களில் குழிகள் தோண்ட முடிவு செய்து இதுவரை 3 குழிகள் தோண்டி கல்லறைகளை கண்டு பிடித்துள்ளோம். இதில் பல வடிவங்களில் பானைகள் மற்றும் கூம்பு வடிவத்துடன் கூடிய குவளைகள் கிடைத்துள்ளது.
கிணறு
இதில் ஒரு கல்லறையில் மனிதனின் மண்டை ஓடு உள்ளது. இதனை டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்பதால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் வர வேண்டும். அதுவரை இந்த மண்டை ஓட்டின் மீது சூரிய ஒளி விழாமல் பாதுகாத்து வருகிறோம்.
ஏற்கனவே நடந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் இருந்த பகுதியில் நீண்ட கால்வாய் போன்று காணப்பட்டது. அது எதுவரை செல்கிறது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அதன் அருகில் நாங்கள் குழி தோண்டி ஆய்வு செய்தபோது அது கால்வாய் அல்ல என்றும், அங்குள்ள கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டு எனவும் தெரிய வந்தது.
இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக 2 திசைகளில் இருந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். அந்த கிணற்றை 10 மீட்டர் நீள, அகலத்தில் 2.36 மீட்டர் ஆழத்தில் பாறைகளை குடைந்து தோண்டியுள்ளனர். இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.
இரும்பு பொருட்கள்
ஆனால் அந்த சுற்றுச்சுவர் தற்போது தோண்டப்பட்ட குழியில் பாதி அளவில் மட்டுமே தெரிவதால், இதனை முழுமையாக கண்டுபிடிக்கும் வகையில் இதை ஒட்டியே மேலும் 6 குழிகள் தோண்டும் பணி நடைபெறுகிறது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தொழிற்கூடங்கள் இருந்த பகுதி தவிர தற்போது நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும் இரும்பு உருக்குதல் மற்றும் இரும்பு பொருட்கள் தயாரிக்கும் பட்டறைகளை கண்டுபிடித்தோம். இங்கு சிறிய அளவிலான கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் என நிறைய இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளது.
பானை ஓட்டில் பெயர்
மேலும் குறியீடுகளுடன் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளது. அதில் ஒரு பானை ஓட்டில் "அம" என பெயர் உள்ளது. ஏற்கனவே "அமனன்" என்ற பெயரில் ஒரு பானை ஓடு எடுத்துள்ளோம்.
கொடுமணல் பகுதியில் நடந்த தற்போதைய அகழாய்வில் 662 உடைந்த பல வகையான வளையல்களும், முழுமையான பலவகையான 343 கல்மணிகளும், இரும்பு, கண்ணாடி, தாமிரத்தில் தயார் செய்த 53 பலவகை பொருட்களும் கிடைத்துள்ளன.
நாணயங்கள்
மேலும் ஆணிகள், உளி, கத்தி போன்ற இரும்பினால் தயார் செய்த 193 பொருட்களும், பல வண்ணங்களில் 103 சிறிய ஓடுகளும், தாமிரத்தால் தயாரான 28 பலவகை பொருட்கள் மற்றும் 15 நாணயங்கள் என மொத்தம் 1,535 பொருட்களை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளோம்.
இந்த பழங்கால பொருட்கள் அனைத்தும் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த போது பயன்படுத்தப்பட்டது என ஜெ.ரஞ்சித் தெரிவித்தார்.
இவருடன் தொல்லியல் அலுவலர் சுரேஷ், தொல்லியல் துறை மாணவ, மாணவிகளான அருண்குமார், அனந்து, வெள்ளையப்பன், பவித்ரா, காயத்ரி ஆகியோரும் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.