கர்நாடகத்தில் புதிதாக 4,000 டாக்டர்கள் நியமனம் - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில் புதிதாக 4,000 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.;

Update: 2021-07-01 20:48 GMT
பெங்களூரு:

உயிர்த்தியாகம்

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் உலக டாக்டர்கள் தின விழா பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஆரோக்கிய சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களை, தியாகிகள் என்று அழைக்கிறோம். நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போராடி 700-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். கொரோனா போர் களத்தில் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இருப்பதால் அவர்களையும் வீரர்கள் என்றே அழைக்கிறோம். இந்த போரில் உயிரிழந்த டாக்டர்களை உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் என்று அழைக்கிறோம்.

டாக்டர்களுக்கான படி

  உயிர்த்தியாகம் செய்த டாக்டர்களின் நினைவாக இந்த ஆரோக்கிய சவுதாவில் டாக்டர்கள் நினைவு சின்னம் அமைக்கப்படும். இந்த நெருக்கடியான நேரத்தில் உழைத்து வரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். டாக்டர்களுக்கான படி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. வரலாற்று நடவடிக்கையாக 1,763 டாக்டர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  அத்துடன் மேலும் 2,050 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்தும் சேர்த்து மொத்தம் புதிதாக 4 ஆயிரம் டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். நோயாளிகளை காப்பாற்ற டாக்டர்கள் கடைசி வரை போராடுகிறார்கள். எந்த நோயாளியும் இறக்க வேண்டும் என்று டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள்.

சிறை தண்டனை

  அதனால் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். நடப்பு ஆண்டில் 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

  கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை. மாநிலத்தில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 9 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று (நேற்று) கர்நாடகம் வருகிறது.
  இவ்வாறு சுதாகர் பேசினார்.

மேலும் செய்திகள்