மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டதும் கல்லூரிகளை திறக்கும் தேதி முடிவு - அஸ்வத் நாராயண் தகவல்
மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டதும் கல்லூரிகளை திறக்கப்படும் தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு:
கொரோனா தடுப்பூசி
கர்நாடகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அனைத்து பல்லைக்கழக துணைவேந்தர்களுடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். கல்லூரிகளை திறக்கும் முன்பு அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இந்த பணிகள் வருகிற 7-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி துணைவேந்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கல்லூரி மாணவர்கள்
எக்காரணம் கொண்டு கற்றல் பணிகள் நிறுத்தப்படக்கூடாது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது. கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தடுப்பூசியே தீர்வு. இதை துணைவேந்தர்கள் தீவிரமாக கருதி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன். கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு கல்லூரிகளை திறக்கும் தேதி குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். நடப்பு கல்வி ஆண்டில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு உதவ அனைத்து பல்கலைக்கழகங்களும் உதவி மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். மாணவர்கள் தங்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து அந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு பெறலாம்.
இவ்வாறு அஸ்வத் நாராண் கூறினார்.