தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள பேக்கரி, ஜவுளிக்கடைகள், மளிகை கடை, உணவகங்கள், கோழி இறைச்சி கடை, பல்பொருள் அங்காடி போன்ற கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துகிறார்களா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் பயன்படுத்த வைத்திருந்த 8 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை ஒன்றுக்கு தலா ரூ.100 வீதம் 12 கடைகளுக்கு 1,200 ரூபாயும், முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த 10 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2 ஆயிரமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500 என மொத்தம் ரூ.3 ஆயிரத்து 700 அபராதம் வசூல் செய்தனர். இந்த ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், சண்முகம், வெங்கடேசன், ஆண்டிமடம் ஊராட்சி செயலாளர் அருண் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.