தடுப்பூசி போட அரசு ஆஸ்பத்திரிகளிலும் முன்பதிவு முறை அமலுக்கு வந்தது

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட அரசு ஆஸ்பத்திரிகளிலும் முன்பதிவு முறை அமலுக்கு வந்தது. நேரடி டோக்கன் முறை மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-07-01 20:26 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட அரசு ஆஸ்பத்திரிகளிலும் முன்பதிவு முறை அமலுக்கு வந்தது. நேரடி டோக்கன் முறை மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்தும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள் ஆகியவற்றின் மூலமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 22 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த  https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கனை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முதல் முகாம்களை தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்த ஆன்லைன் மூலம் டோக்கன் பெற வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க நேரடி டோக்கன் முறை மையங்களை படிப்படியாக குறைப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
10 நிமிடத்தில் முடிந்தது
நேற்று ஆன்லைன் டோக்கன் முறையில் 19 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. நேரடி டோக்கன் முறையில் 19 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. நாகர்கோவில் நகரில் மட்டும் வெட்டூர்ணிமடம் அலோசியஸ் பள்ளியில் ஆன்லைன் டோக்கன் முறையிலும், இந்துக்கல்லூரியில் நேரடி டோக்கன் முறையிலும்  சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
டோக்கன் பெறுவதற்காக அதிகாலை 4 மணிக்கே பொதுமக்கள் ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கினர். இதனால் 4.10 மணிக்கெல்லாம் நாகர்கோவில் தடுப்பூசி மையத்துக்கான டோக்கன்களில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான 100 டோக்கன்கள் முடிந்தது. இதேபோல் சுமார் ¾ மணி நேரத்துக்குள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டோக்கன்கள் முடிந்தன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டோக்கன்கள் மட்டும் சில மணி நேரம் நீடித்தது. 
இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே இந்த டோக்கன்களுடன் வந்து சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி சென்றனர். இதனால் ஆன்லைன் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மையங்களில் நேற்று அதிக அளவில் கூட்டம் இல்லை. நாகர்கோவில் அலோசியஸ் பள்ளியில் ஆன்லைன் டோக்கன் பெற்று சென்றவர்கள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று தடுப்பூசி போட்டுச் சென்றனர்.
ஏமாற்றம்
இதேபோல் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் 200 டோஸ் தடுப்பூசி செலுத்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இங்கு நேரடியாக டோக்கன் பெற்று தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 100-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நேரடியாக டோக்கன் பெற்று தடுப்பூசி போடும் மையங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலையிலேயே வந்து காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கிடைத்தது. தாமதமாக வந்தவர்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை. அதனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது. நேற்று ஒரே நாளில் 38 முகாம்களிலும் மொத்தம் 6 ஆயிரத்து 480 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே சமயத்தில், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி போடுவதற்கான மையங்களை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்