உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளார்கள்.

உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளார்கள்.

Update: 2021-07-01 20:06 GMT
தளி
உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளார்கள்.
ரேஷன் கடை 
ஏழை,எளிய நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக கூட்டுறவுத்துறை மூலமாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஊர்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பகுதி மற்றும் முழு நேர ரேஷன்கடைகள் இயங்கி வருகிறது. அதன் மூலமாக அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பேரிடர் காலத்தில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தரமற்ற அரிசி
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. உடுமலை, குடிமங்கலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முக்கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அரிசி பிரித்து அனுப்பப்படுகிறது. அதைத்தொடர்ந்து குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு அரிசியை பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.
 தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில் கல் மற்றும் குப்பைகள் நிறைந்தும் துர்நாற்றத்துடன் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் தரமற்றதாக உள்ளது. இதனால் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்று அரிசி வாங்குகின்ற பொதுமக்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக வறுமைக்கோட்டுக்கு கீழே வசித்து வருகின்ற பொதுமக்கள் அதனை அன்றாட உணவுக்காக பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
நடவடிக்கை
மேலும் தரமான அரிசி வழங்குமாறு பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் அரிசியை வழங்குவதற்கு முன்பாகவே ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்று இருக்காது. எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்து தரமான அரிசியை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்