பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு? கூட்டுறவு அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணை

பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.;

Update: 2021-07-01 19:56 GMT
சேலம்
பயிர்க்கடன்
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகளால் பெறப்பட்டு கடந்த ஜனவரி 31-ந் தேதி வரை நிலுவையில் இருந்த பயிர் கடன்களை தள்ளுபடி செய்து கடந்த அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. இந்த பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனிடையே கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்பட்டதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிர் கடன்களை வெளி மாவட்ட கூட்டுறவு அதிகாரிகளை கொண்டு மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணி, அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டார்.
தர்மபுரி அதிகாரிகள்
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தர்மபுரி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன்கள் குறித்தும், எவ்வளவு தொகை தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டது? பயனாளிகள் விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
இதற்கிடையே பயிர்க் கடன்கள் குறித்த ஆய்வு பணிகளை வருகிற 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியலில் உள்ள முரண்பாடுகள், முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ள தகுதியற்ற கடன்கள் குறித்த அறிக்கையை சரக துணைப்பதிவாளிடம் உடனே சமர்ப்பிக்க வேண்டும். அதனை துணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்கள் மேலாய்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் அல்லாத நபர்கள்
தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில்தான் கூட்டுறவு பயிர்கடன் அதிகளவில் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் எத்தனை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன, அந்த கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளின் விவரம்? ஒவ்வொரு பயனாளிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை எவ்வளவு? முறைகேடாக விவசாயிகள் அல்லாத நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்த விவரத்தையும் அதிகாரிகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்