மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
ஆலங்குளம் அருகே மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளியைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற வெள்ளையன் (வயது 45). இவர் மாறாந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு ஊருக்குச் செல்வதற்காக அவ்வழியே வந்த அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
மாறாந்தை அடுத்த திருப்பத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருந்த வெள்ளையன் திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த வெள்ளையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளையன் வீட்டில் படுத்திருந்த நிலையில் திடீரென்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.